அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ -நூல் அறிமுகம் -விமர்சகர் த.ராஜன்



"கண்ணீர்வலியைஇழிவுபடுத்திவிடும்என்றொருகடவுள்நம்பிக்கைஎனக்குண்டு."
   - அகரமுதல்வன்

ஈழத்தின் தற்கால சூழலையும் அதன் வரலாற்றையும் அறிந்து கொள்ள இலக்கியம் மட்டுமே நம்பத்தகுந்த ஒரே வழியாக இருக்கின்றது.கொடூர சம்பவங்கள், வன்கொடுமைகள், குண்டுகளின் சப்தங்கள், சிதைந்த உடல்கள், இயலாதோரின் ஓலம், வலி என துயர் நிரம்பிய பக்கங்கள் தான் அடங்கியிருக்கும் என்பதை முன்னமே வாசகர்கள் அறிந்திருப்பதால் ஈழம் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில் பெரும் தயக்கம் காட்டுவதைக் காண முடிகிறது.இயலாமையினால் வரும் குற்றவுணர்வு மட்டுமல்லாமல் தற்போதைய 'ஃபேஸ்புக்மனநிலை'யினால் ஏற்படும் அதிருப்தியும் ஒரு வகையில் காரணம்எனலாம்.எல்லாவற்றையும் மேம்போக்காக போலியாக அணுகும் மனநிலை. ஃபேஸ்புக்கில்கோர சம்பவம் ஒன்றினைக் காணும் மனம் வருந்துகிறது, சிறிது கீழிறங்கினால் காண நேரும் அரசியல் பகடியைக் கண்டு நகைக்கிறது, இன்னும் சற்று இறங்கி சினிமா நாயகன் நாயகியின் படங்களைக் கண்டு உருகுகிறது. இப்படி நொடிக்கு நொடி மாறும் போலியான ஃபேஸ்புக் மனம்இயல்பாகிக் போன இக்காலத்தில் இது போன்ற படைப்புகளை வாசிக்க நேர்பவர் குற்றவுணர்ச்சியில் உழல்வது நிதர்சனம்.

 தீவிரமாக வாசிக்கும் பழக்கமுள்ளவர்களும் கூட  ஈழப் படைப்புகளைத் தவிர்க்கிறார்கள். அவ்வலியைத் தாங்கிக்கொள்ளும் திராணி இல்லை என்பது ஒரு சாராரின் கருத்துஈழப்படைப்புகள் சில சமரசங்கள் எதிர்பார்க்கின்றன என்பது இன்னொரு புறம். அதாவது இது போன்ற படைப்புகள் கையாளும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது என்பதற்காகவே  சிலவற்றை நாம் கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்பதாகச்சொல்வது.

இந்த இருசாராரின் கருத்திற்கும் காரணமாக இருப்பது அனுதாபத்தை மட்டும் கோரிநிற்கும் படைப்புகள் என்பது என் அனுமானம். இத்தகைய இலக்கியப்படைப்புகள் தொடர்ந்து வெளியாவதே அவை வாசிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமாக இருக்க முடியும். கதை சுவாரசியமோ நளினங்களோ நறுக்குகளோ அவசியமில்லை தான், ஆனால், வெறுமனே உள்ளதை உள்ளபடி (ஒரு செய்தித்தாளில் வெளியாகும் பத்தியின் முடிவில் அடையும் உணர்விற்கும் ஒரு இலக்கிய பிரதிதரும் உணர்விற்கும் பெரியதாக வித்தியாசமிருப்பதில்லை) பதிவு செய்வதைத் தவிர்க்கவேண்டுமென்றே தோன்றுகிறது.


ஈழத்தின் வரலாற்றைப் புனைவாக பதிவு செய்வதால் இதைக்கருத்தில் கொள்ளவேண்டுமெனத் தோன்றுகிறது. வருங்காலச் சந்ததிகளுக்கு இப்புனைவுகள் தான் வரலாற்றை அறிய உதவும் மிகப்பெரும் சாட்சி. ஆக, சரியான மொழியில் சரியான உணர்வினை சரியான கதாப்பாத்திரச் சித்தரிப்போடு கதைகள் படைப்பது அவசியமாகின்றது. மண்டோ தனது படைப்புகளில் வன்முறையை, மனிதமற்ற செயல்களைக் கலையாக மாற்றினார். இன்றளவும் மண்டோ வாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்க முடியும்.

அகரமுதல்வனின் கதைகள் வெறுமனே அனுதாபத்தை மட்டும் கோரி நிற்பவை அல்ல. போர் நிலத்தின் யதார்த்தங்களை, போராளிகளின் மனதினை, அவர்களது அரசியல் நிலைப்பாட்டை, போராளிகளின் காதலை, காமத்தை, சாமானியர்களின் வாழ்வியலை அற்புதமான மொழியில் கச்சிதமான வாக்கியங்களில் மிகைஉணர்ச்சியற்ற தொனியில் கதைகளாகப் புனைகிறார்.               அகரமுதல்வனின் எழுத்துகள் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பவையாக அல்லாமல் நமது அனுபவமாக மாறுகின்றன. அதற்கு அகரமுதல்வனின் சொற்பிரயோகங்களும் மொழி ஆளுமையும் பிரதான காரணம்.

அகரமுதல்வனின் உவமைகள் குறிப்பிடத்தகுந்தது. துருத்தாமல், கதையோடு ஓர் அங்கமாக வலுசேர்க்கின்றன. 'தேங்கிய மழை நீரை காலால் தூக்கி மீண்டும் துளியாக்கும் குழந்தைகளின் பாதத்தைப் போல குழலி சிவந்தாள்' –

வீடு வாழ்க்கையைப் போல எரிந்து கொண்டிருந்தது



நீர் வற்றிப் போன ஆற்றின் சரீரம் வெடித்தோடும் ஈரம் பிறழ்ந்த கோடுகளைப் போல மனம் பிறழ்ந்த வெடிப்புகள் எனக்குள் நதிபோல ஓடுகிறது’.
 தாய் தகப்பனை இழந்த இளம் மகள் குறித்த வரியொன்று வருகின்றது. இவ்விடத்தில் அச்சூழலின் துயரத்தை பத்தி பத்தியாக எழுதி வாசகனைக் கண்ணீர் உகுக்கச் செய்திருக்கமுடியும். அவை நீலிக்கண்ணீராக சொற்ப நிமிடங்களில் வடிந்துவிடக்கூடியது.  அவ்விடத்தில் 'பூமியின் மிக இளமையான துயரம் குயிலினியிடம் இருந்தது' எனும் வாக்கியத்தால் மனதின் அடியாழத்தை தொட்டுச்செல்கிறார் அகரமுதல்வன்.

நாம் வாழும் நிலத்தில் இறப்பதற்கு அஞ்சுவது வாழ்வதற்கு சலிப்பதுபோல' - 'பூமியின் நித்திரைக்கு எமது மரணங்கள் கனவு' - 'இந்த நிலத்தில் மட்டும் தான் மரணித்த உயிருக்கு நிவாரணமாய் பரவசம் திரும்புகிறது. விடுதலையின் பரவசமாய் நாம் அனைவரும் மரணிப்போம்' போன்ற வரிகள் மனதில் இருந்து அகல மறுக்கின்றன.

'மரணத்தின் சுற்றிவளைப்பு' எனும் கதையில் ஒரு பத்தி:

 'நித்திலா... வேப்பமரத்தின் குயில் இந்த இரவிலும் கூவிக்கொண்டே இருக்கிறது. அதன் குரலில் பல்லாயிரம் தொண்டைகளின் துயர் கிளைக்கிறது. அந்தக் குயிலை நீ என்று அழைப்பதா? நான் என்று அழைப்பதா? நமது துயரத்தின் கூவல் இதற்கு முன் இப்படிக் கேட்டதா? குயிலின் குரலும் கூவலும் துயரமும் எம்மை ஒத்திருந்தாலும் குயில் மானமில்லாதது. அதற்கென சொந்தக் கூடே இருப்பதில்லை. அது எமது நாட்டை ஆக்கிரமித்து குடியேறும் சிங்களர்களைப்போல காகத்தின் கூட்டில் அல்லவா முட்டையிடும். நாம் எப்போது பிறர் நாட்டை விரும்பினோம். அந்தக் குயிலாய் நீயோ நானோ நாமோ இருக்கவே முடியாது.'

மிகச்சாதாரண விஷயத்தைக் குறிப்பிட்டு பெரும் அரசியலை பேசிக்செல்கின்றன இது போன்ற வரிகள்.

சுட்டுக் கொல்லப்படுவர்களின் வரிசையில் முதல் ஆளாகக்கூட தான் இருக்கலாம் என போராளி எண்ணுகிறான். அப்போது எழுதுகிறார்:

'அப்படி வாய்க்கும் ஒரு மரணத்தை நான் மறுக்கேன். அசையாமல் என் நெற்றியை குறிபார்க்கும் துவக்கின் குழலையே எனது கண்களும் குறி பார்க்கும்.' போராளியின் தீரத்தை பெருமைபோற்றும் வாக்கியங்களாலால் அல்லாமல் எளிமையான ஒற்றை வரியில் அவனது மனத்திட்பத்தையும் வீரத்தையும் சொல்லிச்செல்கிறார். அசையாமல் என் நெற்றியை குறிபார்க்கும் துவக்கின் குழலையே எனது கண்களும் குறி பார்க்கும்!

நாட்டுக்கு கௌவரமாய் இரத்தம் சிந்திய எம்மக்களை  கேவலமாக தண்ணீருக்காக சண்டையிட பழக்கிவிட்டது இந்த அகதி முகாம் வாழ்க்கை என்று எழுதுகிறார்.

சமகாலத்தில் போராளிகள் மீதான மற்றவர்களின் பார்வையும், தற்போதைய சூழலில் மக்களின் மனப் போக்கும் இவரது கதைகளில் ஆங்காங்கே பதிவாகின்றன.

'தூயவள் சொன்னது சரியானதுவே. ஏழ்மையில் மூழ்கி தெருவில் அலைந்து திரிபவர்களாய் காலம் ஆக்கிய போராளிகளை வெளிநாட்டில் இருந்து வருகிற சனங்களில் சிலர் விநோதமாய் பார்த்துக் கடந்து செல்வது கீரனுக்கே நிகழ்ந்ததுதான். அந்தக் காட்சி மிக மோசமானது. நேற்றைக்கு தெய்வங்களாய் வழிபட்ட சிலைகளை இன்றைக்கு கால்களால் தட்டிவிட்டு செல்வதைப்போலான காட்சி.'

நந்திதனுக்காக ரொட்டி சுடுகிறான். நேரமின்மையால் சம்பல் இடிக்கமுடியாதென இருப்பதைச் சாப்பிடுகிறார்கள். பார்வையை வெளியில் செலுத்தியபடி உணவருந்தும்போது நந்திதன் சொல்கிறார்,

“விதிகளுக்கு இசைந்தவாழ்வு ரசிப்பதற்கு பிரபஞ்சத்தின் அழகுபோதாது.' தனது வாழ்வினை, வலியினை இயல்பாகபறைசாற்றும் வரி!இன்னொருவரி:

'தன்னை அவள் தனியாகவிட்டு இறந்துபோவாளா? வாழ்வதையே தீர்மானிக்க இயலாத வாழ்வில் இறப்பது யாரோடுவென தீர்மானம் கொள்வது எவ்வளவு விசர்த்தனம்.'

கீரனுக்கும் தூயவளுக்குமிடையே உடலுறவு நடைபெறுவதாக 'பிரேதங்கள் களைத்து அழுகின்றன' எனும் கதைதொடங்குகின்றது.
 பாதி கதை கடந்த பின்பே அவர்கள் கைகளை இழந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார். இதுவேஅகரமுதல்வனின்சிறப்பம்சம்.

முதலிலே இப்படியொரு வர்ணனையைத் தந்திருந்தது உடலுறவு கொள்வதாக எழுதியிருந்தால் அது வாசகனின் அனுதாபத்தை கோரிநிற்கும் .கண்ணீர் வடித்திருப்போம். அதை அகரமுதல்வனின் கதைகள் எதிர்பார்ப்பதில்லை.

சதத் ஹசன் மண்டோவை அகரமுதல்வன் எட்டும் தூரம் வெகு தொலைவில்   இல்லை. 


Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்